அவர்களின் கதைகள்

நிலையற்ற சந்தர்ப்பங்கள் மற்றும் காலனித்துவ சூழலில், படக்குரல் (photovoice) ஒரு எதிர்ப்புக் கருவியாக மாறுகிறது—
ஆளும் பிரதிநிதித்துவங்களை எதிர்த்து சவாலிடுவதோடு, நுணுக்கமான கதைகளைப் அச்சமின்றி பாதுகாப்பாகப் பகிர வழி செய்கிறது. இக்கதைகளை ஒன்று சேர்த்து ஒன்றாக்கப்பட்டக் கதைகளாக (composite narratives) கூறுவதால், இந்த ஆய்வில் கலந்தாதரித்தோர் அநாமதேயர்களாக இருப்பினும் அவர்களது ஒன்றிணைந்த உண்மை இன்னும் உரக்க ஒலிக்கும். அனைத்து புகைப்படங்களும் குழு உறுப்பினர்களாலே எடுக்கப்பட்டவை.
இருந்ததிற்கும் இருப்பதிற்கும் நடுவே
நாங்கள் மழையோ வெயிலோ, அந்த குடியில் தான் வேலை செய்தோம். அது மிகவும் கஷ்டமாக இருந்தது. அங்கே தான் என் வாழ்க்கை ஆரம்பித்தது – என் பிள்ளையையும் வளர்த்தேன். நாங்கள் எப்போது எங்கு சென்றிடினும், துயரங்களைச் சந்தித்தோம்; அந்த சுட்டெறிக்கும் வெயிலில் வேலை செய்து நோயுற்றதும் உண்டு.
ஏனெனில் அது என் வீடு. எல்லாமே, நல்லது கெட்டது அனைத்துமே இந்த வீட்டில் தான் நடந்தேறியது. நான் எதிர்கொள்ளும் துயரங்கள் யாருக்கும் தெரிந்திட கூடாது. நான் நேரே நடந்து வந்து, தடுக்கி விழுந்திடுவேன். திரும்ப எழுந்து நடப்பேன், ஆனால் மறுபடியும் ஒருமுறை தடுக்கி விழுவேன். எத்தணை முறை வீழ்ந்தாலும் நான் எண்ணியதை அடையும் வரை முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.
“ஏன் எனக்கு தாத்தா பாட்டி யாரும் இல்லை?” என ஒருமுறை என் அம்மாவிடம் கேட்டேன். “நோய்வாய்ப் பட்டதால்…அவர்கள் தவறிவிட்டனர்,” என்றாள் என் அம்மா. எனக்குத் தாத்தா பாட்டியின் பாசம் அக்கறையென ஒன்று கிடைத்ததில்லை.
என் அப்பாவின் குடும்பமோ எங்களைக் கண்டுக் கொண்டதே இல்லை. அதனால், எங்களுக்குள் உறவென்பது இருந்ததில்லை.
தாத்தா, நீ நினைத்திருப்பாய், நம் முன்னோர்கள் நினைத்திருப்பார்கள், “என் பேரக் குழந்தைகள் ஒரு நாள் நல்லாய் இருப்பார்கள், என் குழந்தைகள் ஒரு நாள் நல்லாய் இருக்கும். அவர்கள் எதிர்க்காலத்தில் சிறப்பாக வாழ்வார்கள்,” என. ஆனால் இப்பொழுதும் எதுவும் மாறிடவில்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. இப்போது அவதிப்படும் நாங்களும், நீங்கள் எண்ணியவற்றை தான் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
எனக்கு அன்பென்று கிடைத்ததில்லை, அப்பா…என்னால் ஆண்களையே நம்ப முடியவில்லை…ரொம்ப வலிக்கிற்து, ரொம்ப கஷ்டமாய் இருக்கு.
ஏன் என்னை உன்னோடு கூட்டிச் செல்லவில்லை. அப்பா? நீ அன்று அம்மாவோடு மகிழ்ச்சியாய் வாழ்ந்திருந்தால், இன்று என் வாழ்க்கை நன்றாய் இருந்திருக்கும், அப்பா.
ஆனால் எனக்கு உன்மேல் ஒரு கோபம்: நீ அம்மாக்கென ஒன்றும் விட்டு விட்டு செல்லவில்லை. அவளை அம்போவென விட்டுச் சென்றாய். இப்போது, அவளது முதிய காலக்கட்டத்தில், மிகவும் அவதிப்படுகிறாள். அதனால் தான் எனக்கு உன்மேல் கோபம். நீ அவளுக்கு ஏதேனும் சேமித்துவிட்டு சென்றிருக்க வேண்டும்.
ஒரு வேளை என் அப்பா இருந்திருந்தால்… நான் நன்கு படித்திருப்பேன். கல்லூரிக்குச் சென்றிருப்பேன். கல்லூரியல் பயில எனக்கு நீண்ட கால விருப்பம். ஆனால் என் நிலைமையினால், ஆறாம் ஆண்டிலே பள்ளி வாழ்வை முடித்துக் கொண்டேன். அவர் மட்டும் இருந்திருந்தால், என் கன்வுகளைத் தேடி, கல்லூரிக்குச் சென்றிருப்பேன்.
இருப்பினும், நான் என் அம்மா வாழ முடியாத வாழ்க்கையை இப்பொழுது வாழ்கிறேன். என் தாயார் வீட்டில், ஒரு வேளை உணவுக்குக் கூட திந்தாடுவோம். ஆனால் இன்று, நான் நன்கு உணவருந்துகிறேன், நல்ல வாழ்க்கையை வாழ்கிறேன். அவை அனைத்தும் என் தாயார் கொடுத்த ஊக்கத்தின் காரணம்தான்.
என் கடந்த வாழ்விலிருந்து, என் அம்மாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டது, கொடை வழங்கும் குணமாகும். அவளிடம் இல்லாத போதிலும், உதவி என்று நம்மைத் தேடி வருபவருக்குக் கைகொடுக்கச் சொல்லி தந்திருக்கிறார். அவள் எனக்கு சொல்லி கொடுத்ததை நான் இன்றும் பின்பற்றுகிறேன்.
இப்போது, நான் என் பிள்ளைகள் அனைவரும் முறையாக கல்வி கற்பதை உறுதி செய்கிறேன். நான் பயின்றதைவிட, அவர்கள் அனைவரும் பண்மடங்கு சிறப்பாக பயில்கின்றனர். நீ என்னிடம் சொன்னாய், ஆங்கிலம் பேசு, ஆங்கிலம் பேசுமிடத்தில் பணி புரி, நல்ல வேலையைப் பெற்றுக்கொள் என்றெல்லாம். இன்று, என் பிள்ளைகள் அக்கனவுகளை உனக்காக நிறைவேற்றுகின்றனர்.
நாம் முன்கொண்டு செல்வது
நான் இருந்த சூழலில், திருமணம் செய்துக் கொண்டேன். என் அம்மா கூறினால், ‘எவ்வளவு துன்புறுத்தினாலும் அன்பு செலுத்தினாலும், நீ திருமணம் செய்துக் கொண்டதால், அவனோடு தான் வாழ வேண்டும்.’ ஆனால் நான் அவளிடம் சொல்லியிருந்தேன், ‘இதற்கு முன்பு அவன் என்னை துன்புறுத்தியிருந்தான், ஆனால் இனிமேல் நான் அவனை அனுமதிக்க மாட்டேன். என் மேல் கைவைத்தால், நான் செய்ய வேண்டியதைக் கட்டாயம் செய்வேன்.”
இப்போது, எனக்கெல்லாம் தெரியும். எப்படி இருக்க வேண்டுமென தெரியும். நான் உனக்கு அடிமையாக இருக்க மாட்டேன். நான் என் வாழ்ககையை வாழ்ந்தாற் போலவே, என் வழியில் செல்வேன். ஆனால் உன்னுடன் தான் இருப்பேன். என்னை யாரும் அவமதிக்கவும் விட மாட்டேன். என்னால் புத்துணர்ச்சி இழந்து இருக்க முடியாது. நான் எப்படி செடிகளைத் தழதழ என வைத்திருக்கின்றேனோ, என் வாழ்க்கையும் அது போல சிறப்படையச் செய்ய வேண்டும். அச்செடி என் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான நினவூட்டலாக விளங்குகிறது.
அப்பொழுதெல்லாம், நான் வெளியே கூட செல்லமாட்டேன். ஆனால் இன்று, அன் சொந்த செலவில் பல இடங்களுக்குச் சென்று வந்துவிட்டேன். எவ்வளவு தூரம் வந்துவிட்டேன் எனப் பார்த்தாயா! அந்த நாட்களில் எல்லாம், எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால், இன்று என்னால் அனைத்தையும் செய்ய முடியும்.
என் சொந்த ஊருக்குப் 14 நாட்கள் பயணித்திருந்தேன். அன்றெல்லாம் வெளியே கூட சென்றிருக்க மாட்டேன். எனக்கு பயம். இப்பொழுதில்லை அப்பயம். பயத்திலே வாழ்ந்தால், நம்மை பிறர் எதுவேண்டுமானாலும் செய்வர்.
Nஇன்று நான் கம்பீரமாக நடக்கிறேன். எங்குவேண்டுமானாலும் பயணிக்கிறேன். இந்த துணிவுக்கெல்லாம் காரணம் என் அம்மா. அவள் எனக்குக் காட்டிய வழியில், நான் இன்று நடக்கிறேன்.
பாட்டிக்கு இருசக்கர வண்டிக்கு உரிமம் பெற்று, அதை ஓட்ட வேண்டுமென ஆசை. அவளுக்கு உலகைச் சுற்றவும் ஆசை இருந்தது. ஆனால், அவளால் அவை எதையும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் உன் கொள்ளுபாட்டனாரும் கொள்ளுபாட்டியாரும் மிகவும் கண்டிப்பானவர்கள். “நீ வாகனம் ஓட்டினால் மயங்கி விழுந்திடுவாய்” என சொல்லி, என்னை வாகனம் ஓட்டும் உரிமத்தைப் பெற விடவில்லை.
என்னைத் தனியே வெளியே செல்லக்கூட விடமாட்டார்கள். எப்பொழுதும் மேற்பார்வையுடன் தான் இருப்பேன். உன் தாத்தாவோடும் அது தான் நடந்தது. ஆனால் நீ, என்னைப் போல் இருக்காதே. தைரியமாக இரு.
நீ வேறெந்த நாட்டிற்குப் போக விரும்புகிறாயோ தயங்காமல் போ. உன் வயதைப் பற்றியெல்லாம் யோசிக்காதே. உன்னிடம் பணமிருந்தால் போய், சந்தோஷமாக சென்று அனுபவி. நாம் நாளை இங்கு இருப்போமா என்றே தெரியாது. வாழ்க்கை மிகவும் சுருக்கமானது. அது சிறிதாக இருப்பினும், உள்ளவரை அதை அனுபவித்துக் கொள்.
எந்தவொரு பிரச்சனைகள் வந்தாலும், உன் தாயை என்றும் கைவிட்டு விடாதே. அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள். நானொரு தனித்தாய். என் மகன் என் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு, தந்தையில்லாவிடிலும் வழிதவறி செல்லவில்லை. சரியான வழியைப் பின்பற்றி நல்ல மகனாய் வளர்ந்தான்.
நான் தொடர்ந்து புது மாற்றங்களைக் காண பல பரிணாம வளர்ச்சியைக் காண்கிறேன். தொடர்ந்து வளர்ச்சியைக் காண வேறு மாதிரியாக வாழ விரும்புகிறேன். இந்த நற்குணங்களை என் பிள்ளைகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களிடம் நான் முன்பே சொல்லிவிட்டேன், இதற்கு மேலும் தொடர்ந்து சொல்வேன்:
“உங்கள் பாட்டியைப் போலவே, என்னைப் போலவே, நீங்களும் கடுமையாக உழைக்க வேண்டும், சுத்தத்தைப் பேண வேண்டும், பக்தியோடு பிரார்த்திக்க வேண்டும் மற்றும் மூத்தோர்களுக்கு மரியாதைச் செலுத்த வேண்டும்.”
நம் மூன்னோர்கள் நமக்குள் இன்றும் வாழ்கின்றனர்
பயம்… ஆம், பயம். எதைக் கண்டு எனக்கு பயம். நம் மக்கள் மிகவும் சிறிதாகிவிட்டனர். அக்காலக்கட்டத்தில் எல்லாரும் ஒன்றுபட்டு இருந்தார்கள். இன்று, அனைவரும் பிரிந்து, மதப்பிரச்சனைகள், வேலை பிரச்சனைகள், எல்லாமே, எல்லாமே கடினமாகிவிட்டது.
Nஇன்று, எதுவாய் இருப்பினும் பணம் தேவை. எங்கே சென்றாலும், பணம் தான். ஆனால், அன்று அதையெல்லாம் சமாளித்துவிட்டோம். எஸ்டேட் வாழ்க்கை உண்மையிலேயே மிகவும் சந்தோஷமான வாழ்க்கையாகும்.
இப்பொழுதெல்லாம், பணி நேரங்களினாலும் வேலை அட்டவணைகளினாலும், அனைவரும் வேலக்கு கிளம்பி விடுவர். கூட்டு சேர்ந்து, இடத்தைக் கரும்புகளைக் கொண்டு அலங்கரித்துவிட்டு பொங்கல் செய்யாமல், விறுவிறுவென 5 நிமிடத்தில் அடுப்பின் மேல் பொங்கல் வைத்துவிட்டு வேலைக்குச் சென்றிடுவர்.
இன்றெல்லாம் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு பாடுப்டுகின்றனர். நாம் அன்றிருந்தவர்களைப் போல் துணிவுடன் வாழ வேண்டும் – மன உளைச்சலுக்கு ஆளாகாமல்.
நாங்கள் செல்வந்தர்கள் அல்ல, ஏழைகளும் அல்ல, எங்கோ நடுநிலையில் உள்ளோம். பிரச்சனைகள் வரும்போதெல்லாம் என் அம்மாவிற்கு அதனை சமாளிக்கும் வழிகள் தெரியும். நான் அவளிடம், “எப்படி பிரச்சனைகள் வரும்போதெல்லாம் அதனை எதிர்க்கொள்கிறீர்கள்? கடன் செலுத்த முடியாத போதோ, கடினமான சூழல்நிலைகள் ஏற்படும் போதோ எவ்வாறு அவற்றைச் சந்தித்தீர்கள்?” எனக் கேட்ட பொழுது, அவள் பதிலுக்கு, “அப்படித்தான் என் அம்மா இருந்தாள். தைரியமாக, அச்சமின்றி.
அனைத்தையும் சந்தித்துவிட்டு முன் வந்தாள்,” என்றாள். எந்தவொரு பிரச்சனைகளைக் கண்டாலும் மனம் தளரவிடாமல் எதிர்கொள்வதையே நான் என் அம்மாவிடம் பார்த்தேன். அதற்கு, நான் என் பாட்டிக்கு நன்றி சொல்கிறேன். பாட்டி இங்கு எங்களோடு இல்லாவிடிலும் அவருடைய துணிவு இன்னும் என் அம்மாவுடன் தான் இருக்கிறது.
நீங்கள் எனக்கு நம்பிக்கையையும் ஆதரவையையும் ஊட்டும் நபராய் என் பக்கத்தில் இருந்து, வரும் துயரங்களை எதிர்க்கொள்ள உதவுவாய் என நம்புகிறேன். நீங்கள் எங்கு இருப்பினும், எங்களை என்றும் ஆசிர்வதிக்கின்றீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
மூத்தோர் சொல் சரியாய் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு – ஏனெனில் அவ்வாறே அன்று முதல் இன்று வரை அவ்விஷயம் அமைந்துள்ளது. இப்போதெல்லாம் மக்கள், “என் கூட்டாளி இதை சொன்னான்,” அல்லது ‘என் கணினி அதை சொன்னது,” என்றெல்லாம் சொல்வார்கள். நான் அதை எதையும் நம்புவதில்லை. மூத்தோர் சொன்னதையே நான் கேட்டு நடப்பேன்.
மிக்க நன்றி, அப்பா. என் வாழ்க்கையில் நிறைய நல்லது செய்திருக்கிறீர்கள். எனக்கு ஒரு வீடு வாங்கித் தந்து, வணிகத்தொழிலை அமைக்கவும் உதவினீர்கள். நான் அது அனைத்திற்கும் பெரும் நன்றிகடன் பட்டிருக்கிறேன். நீ கொடுத்த அடித்தளமே என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அஸ்திவாரமாய் அமைந்தது. நான் செய்ய வேண்டிய அனைத்தையும் ஒன்றொன்றாக செய்து முடிக்க முடிந்தது.
நீங்கள் எனக்களித்த தைரியத்தில் தான், நான் இன்றும் என் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதோடு கடினமாகவும் உழைக்கிறேன். நான் இப்பொழுது ஒரு நல்ல நிலையில் இருக்கேன், அப்பா. என் வாழ்க்கையில் என்னென்னவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அதெல்லாம் என்னை மேலும் தைரியமும் தன்னம்பிக்கை உடையவளாகவும் மாற்றுகிறது. நான் இப்போது கொண்டிருப்பவை அனைத்தையும் சுயமாக ஈட்டியுள்ளேன். என் கனவுகளிலும், நீங்கள் எங்களோடுதான் தான் இருக்கின்றீர்கள் எனத் தெரியும்.

நிலையற்ற களும் காலனித்துவமும் பெண்களின் வாழ்க்கையை இன்றும் எவ்வாறு வடிவமைத்துக்கொண்டு இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன.
பொருளாதார நிலையின்மை, குடும்ப இழப்பு மற்றும் சமூகப் புறக்கணிப்பு போன்ற பிரச்சனைகள் தனிபடுத்தப்பட்ட அனுபவங்களாக அல்ல, அவை மற்றவர்களைவிட ஒரு சில மனித உயிர்களை அதிக மதிப்புடையதாகக் கருதும் ஒடுக்குமுறை அமைப்புகளிலிருந்து பல தலைமுறைகளாக உருமாறாமல் தோன்றி வரும் துயர்கள் ஆகும். இந்தக் கதைகள் முழுவதும், பெண்கள் தங்களின் வாழ்வாதாரம் வாழையடி வாழையாக வழங்கி வரும் வலிமையை எண்ணியே இருப்பதாக சொல்கின்றனர்— உழைப்பு, பராமரிப்பு, மற்றும் நினைவுகளே தங்களின் மூலதனம் என்பதைப் பகிர்கின்றனர்.
தமக்கே இல்லை என்றாலும் தாராளமாக வழங்கியவர்கள், தங்களுக்கே தாங்கும் சக்தியை கற்றுக்கொடுத்தவர்கள்,
தாங்கள் அடைய முடியாத கனவுகளை இன்று தங்கள் பிள்ளைகள் நிறைவேற்றுவதை எண்ணி மகிழ்வது தாய்மார்களே.
ஆனால் இந்த வரம்புகளுக்கிடையேயும், பெண்கள் தங்களுக்கு உரிய எதிர்ப்பு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு,
அக்கறைக்கு புது வடிவழங்கி, விடாமுயற்சி மற்றும் அன்பு ஆகியவற்றை தொடர்ந்து வாழ்வதற்கான ஒரு வலிமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

